அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் #DonaldTrump – #KamalaHarris இடையே அனல்பறந்த விவாதம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இருவரும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரும் கடுமையாக விவாதித்தனர்.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதிரடியாக பல வாக்குறுதிகள் இருவரும் மாறி மாறி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். தொடக்கத்தில், ஹாரிஸ் மற்றும் டிரம்ப் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இருவருமே கைகுலுக்கினர். இதன்மூலம் அதிபர் தேர்தல் விவாத மேடையில் கைகுலுக்கல் இல்லாத எட்டு ஆண்டு தொடர் நிகழ்வுகள் முடிவுக்கு வந்துள்ளது. டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
விவாதம் தொடங்கியதும் டெனால்டு டிரம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் பேச ஆரம்பித்தார். அமெரிக்க மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது கமலா ஹாரிஸ் கூறுகையில், “இந்த கேள்வி அமெரிக்க மக்களின் மனதில் அதிகம் இருக்கிறது. நடுத்தர வர்க்க பின்னணி உடைய என்னை உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால், அமெரிக்க குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன் என்று பேசினார்.
தொடர்ந்து டொனால்டு டிரம்பை குறிவைத்து கமலா ஹாரிஸ் பேசுகையில், “டிரம்ப் அதிபராக இருந்த போது கோடீஸ்வரர்களுக்கும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிக் குறைப்புகளை வாரி வழங்கி வந்தார். ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றபோது, டிரம்ப் பொருளாதாரத்தை விட்டு வெளியேறிய நிலை பற்றி உங்களுக்கே தெரியும். டிரம்பிடம் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை" என்று கடுமையாக பேசினார்.
தொடர்ந்து, ஜோ பைடன் நிர்வாகத்தின் செயல்களை சுட்டிக்காட்டியும், கமலா ஹாரிஸை குறிவைத்து விமர்சித்தும் டிரம்ப் பதிலளித்தார். அவர், “முழுக்க பொய்களும், குறைகளும், மற்றும் பெயருக்கு சில விஷயங்களும் தான் இருக்கும்" என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட கமலா ஹாரிஸ், "டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை எப்படி விட்டுச் சென்றார் என்பது பற்றி பேசுவோம். பெரும் மன அழுத்தத்திற்கு மக்கள் ஆளான காலக்கட்டத்திற்கு பிறகே, டொனால்ட் டிரம்ப் நம்மை மோசமான வேலையில்லாத திண்டாட்ட நிலையுடன் விட்டு போனார். நமது ஜனநாயகத்தின் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தி விட்டு சென்றார். எனவே அவர் அதிபராக இருந்து செய்த குழப்பத்தையே இன்னும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், "கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட். கோவிட் தொற்றுநோய்களின் போது நான் செய்த சிறந்த வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை . கோவிட் பாதிப்பின் போது, என் தலைமையிலான அரசு அற்புதமான வேலையைச் செய்தது” என தெரிவித்தார். கருக்கலைப்பு பற்றி பேசிய கமலா ஹாரிஸ், “டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வந்தால் கருக்கலைப்புகளை தடை செய்வார் என்று எச்சரித்தார். அதற்கு டிரம்ப் உடனே "கமலா பொய் சொல்கிறார்" என்று பதிலளித்தார். இப்படியாக விவாதம் அனல் பறந்து நடந்து கொண்டிருந்தது.