கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு இன்று (மே 22) ரஷியாவுக்கு புறப்பட்டனர். இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை (மே 23) ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி ராஜீவ் ராய், பாஜக கட்சியை சார்ந்த எம்.பி கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.