”அமைதியை விரும்புவோருக்கு பெரிய இழப்பு” - போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
கத்தோலிக்க திருச்சபை மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மருத்துவமனையிலிருந்து மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி போப் பிரான்சிஸ் தற்போது உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு உலக அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித போப் பிரான்சிஸின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.