"ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதாகமாக வந்தது. அதன்படி, ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இதன் 415 பக்க தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் வெளியானது.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு சிறப்புப் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
"சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்பேரவையில் பெருமையுடன் அறிவித்தேன். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான்; இதைத்தான் தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பும் கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு, சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதைக் கூறுகிறது. ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டது. ஆளுநரின் பதவி என்பது நியமிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால், அது ஒரு கௌரவப் பதவி மட்டுமே"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.