மரக்காணம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தினேஷ் (21). இவரும் காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் உள்ள அத்திப்பகுதி கிராமத்தை சேர்ந்த ராகவனும் (20) நண்பர்கள். தினேஷ் மற்றும் ராகவன் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று (மார்ச் 30) காலை தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை ராகவன் ஓட்டி வந்தார். இன்று காலை இவர்கள் மரக்காணம் அருகே தீர்த்தவாரி வளைவு என்ற இடத்தில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இவர்களது இருசக்கர வாகனம் அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்டு சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராகவன் படுகாயமடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார் படுகாயமடைந்த ராகவனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரக்காணம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.