For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னைக்கு அருகே கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய வாய்ப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

04:04 PM May 23, 2024 IST | Web Editor
சென்னைக்கு அருகே கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய வாய்ப்பு  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Advertisement

சென்னைக்கு அருகே கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்து,  அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழ்நாட்டிலும், மலேசியா,  சிங்கப்பூர்.  ஜப்பான்,  அரபுநாடுகள்,  பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி அவற்றின் மூலம் 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்கள்.  அவற்றின் பயனாக தமிழ்நாட்டில் 30 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றார்.  அங்கு உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக,  கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளார்கள்.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர்.  இதன் மூலம் சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement