"உலக அளவில் பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு 2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,
"மக்களின் உயிர் காக்கும் சேவை பணிக்கு ஆணை வழங்க என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் செய்ய கூடியது, மக்களின் உயிர் காக்கும் பணி. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்கள் நலனை கவனிக்க இந்த திமுக அரசு இருக்கிறது.
திமுக அரசு மக்களை காக்கும் அரசு; மக்களுக்கான அரசு. எத்தனை தடைகள் வந்தாலும், எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் மக்களுக்கான பணியை திமுக மேற்கொள்கிறது. சட்ட நெருக்கடிக்கு பிறகுதான் பணி ஆணைகளை வழங்கியுள்ளோம். 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புதான்.
மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என இப்படி மு.கருணாநிதி உருவாக்கிய மருத்துவ கட்டமைப்பால் இன்று தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.