பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி நவிஷ்கா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழைப்பந்தல் போலீசார் சிறுமியின் பெரியப்பா விக்னேஷின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு வெடித்தபோது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி நவிஷ்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
”ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதனையும் படியுங்கள்: ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி; கேண்டீனை மூட உத்தரவு
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வகிறேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷிற்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்".
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.