“பெரியாரும்... பெயிண்ட் டப்பாவும்...” TVKMaanaadu-ல் கொள்கை தலைவர்கள் குறித்து விஜய் கூறியது என்ன?
“பெரியார் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு வருவார்கள் என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். மேலும் தவெக ஏற்றுள்ள கொள்கை தலைவர்கள் யார் யார் எனவும் விளக்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைப்பெற்றது. இதில் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. மேலும் தங்கள் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள், கொள்கைத் தலைவர்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தார்.
கொள்கைத் தலைவர்கள் குறித்து அவர் பேசியதாவது;
பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினால் போதும். நம் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். அரசியலில் நம்பிக்கை தருவது இந்த கொள்கையும், கோட்பாடுகளும் தானே. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் தந்தை பெரியார். பெரியார் என்பவர் உங்களுடைய கொள்கை தலைவரா? அப்படி ஒரு கூட்டம் அவர்களா நினைத்துக் கொண்டு கூச்சல் மேல் கூச்சல் போட்டுக்கொண்டு, ஒரு பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். பெயிண்ட் டப்பா பிசினஸுக்கு நான் பிறகு வருகிறேன்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க மாட்டோம். எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ தான் எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை என பெரியார் கூறிய அனைத்தையும் நாம் முன்னெடுக்க போகிறோம்.
பெரியாரை அடுத்து பச்சைத்தமிழர் காமராஜர் எங்களுடைய கொள்கை தலைவர். மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்ததால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரை எங்களுடைய கொள்கைத் தலைவராக ஏற்கிறோம். இந்தியாவின் அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரை கேட்டாலே, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துபவர்கள் நடுங்கி போய் விடுவார்கள். பெண்களை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி நம்முடைய தமிழக வெற்றி கழகம் தான். இரண்டு வீரமங்கைகளை நாம் கொள்கை தலைவர்களாக ஏற்கிறோம். வீரப் புரட்சியாளர் வேலு நாச்சியாரை எங்களுடைய கொள்கை தலைவராக ஏற்கிறோம். மண்ணின் முன்னேற்றத்திற்கு மிகவும் பாடுபட்ட அஞ்சலையம்மாளை எங்களுடைய கொள்கை தலைவராக ஏற்கிறோம்.
இவர்களை அனைவரையும் நாம் பின்பற்றுவது தான் மதச்சார்பின்மை, சமுதாய நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய சான்றாக இருக்கும். வழிகாட்டி. நம்மை பார்த்து மற்றவர்கள் விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்லிட கூடாது. நம்முடைய கொள்கை கோட்பாடு மற்றும் வழிகாட்டி தலைவர்களை பின்பற்றி நாம் செயல்படுவதை பார்த்து நாம் வேகமும் விவேகமும் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் சொல்லவேண்டும். சொல் அல்ல முக்கியம். செயல் செயல் செயல் தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.