சென்னை துறைமுகம் வந்த கண்டெய்னர் லாரியில் கைவரிசை காட்டிய கும்பல்... 111 ஏசிகள் திருட்டில் 6 பேர் கைது!
மணலி விரைவு சாலை முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் Sssb டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வருபவர் மேலாளர் சபரி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தடாவில் உள்ள DAIKYIN நிறுவனத்தின் 160 புதிய குளிர்சாதன பெட்டிகளை, மேற்கு வங்கத்திற்கு TN 28 AL 0493 என்ற எண் கொண்ட கண்டெய்னர் லாரி மூலம் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையே ஓட்டுநர் உதவியுடன், ஏழு பேர் கொண்ட குழு கண்டெய்னரை வேறொரு குடோனுக்கு எடுத்துச் சென்று, 111 குளிர்சாதன பெட்டிகளை திருடிக்கொண்டு, போலியாக சீல் வைத்து பெட்டிகளை கொல்கத்தாவிற்கு சென்னை துறைமுகம் வழியாக கப்பலில் அனுப்பியுள்ளது.
மார்ச் மாதம் பெட்டியை திறந்து பார்த்ததில் 320 ஏசிகளுக்கு 111 ஏசிகள் காணவில்லை. இதனையடுத்து 111 பெட்டிகளை காணவில்லை என தகவல் அளித்ததின் பேரில், குடோன் மேலாளர் சபரி எண்ணூர் காவல் நிலையத்தில்
காணாமல் போன குளிர்சாதன பெட்டிகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் எண்ணூர் உதவி ஆணையாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி நெடுமாறன் (31) மற்றும் திருவொற்றியூர்
சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த குற்றவாளி ராஜேஷ் (41), திருவாரூர் மாவட்டம்
கோறையார் கிராமத்தை சேர்ந்த இளமாறன் ( 32), தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த சரவணன் ( 34), திருவொற்றியூர் ராஜா சம்பவம் நகரை சேர்ந்த ஜானகிராமன் ( 45), மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த உதயநிதி (28), ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 15 குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்டெய்னர் லாரி ஓட்டுனரான குருமூர்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இருவரை எண்ணூர் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.