எல்லையில் பாசப்போராட்டம் - உறவினர்களை வேதனையுடன் பிரிந்து செல்லும் பாகிஸ்தானியர்கள்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து இன்றைக்குள் (ஏப்ரல்.27) வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விசாக்கள் ரத்து செய்வதாகவும் வெளியுறவித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பதிலுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்நாடு அறிவித்தது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிழவியுள்ள சூழலில், தொடர்ந்து இரு நாட்டு மக்களும் தங்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தங்கள் உறவினர்களை அட்டாரி எல்லையில் வழியனுப்ப வந்தனர்.
இதில் 272 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர், அதே நேரத்தில் 13 அதிகாரிகள் உட்பட 629 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்துள்ளனர். இந்த வெளியேற்றத்தில் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்த பாகிஸ்தானியர்கள் பாசப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சரிதா என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “என் அம்மா இந்தியர், அவர் எங்களுடன் பாகிஸ்தானுக்கு வர அதிகாரிகள் அனுமதிக்க மாட்டோம் என்று எங்களிடம் கூறுகிறார்கள். என் பெற்றோர் 1991 இல் திருமணம் செய்து கொண்டனர்” என்று தன் அம்மாவை பிரிந்த வேதனையுடன் பேசியுள்ளார்.
அதே போல் 11 வயது சிறுமி ஒருவர் பேட்டியளித்தபோது, “என் அம்மாவை விட்டுச் செல்வது மிகவும் கடினம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார். மேலும் இது போல பலர் தங்களது உறவினர்களை வேதனையுடன் பிரிந்து எல்லையை கடந்த வண்ணம் உள்ளனர்.