கூடலூர் அருகே யானை தாக்கி பெண் தொலிழாளி உயிரிழப்பு!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் வெட்டுக்காடு பகுதியைச்
சேர்ந்தவர் பிச்சை குட்டி. இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் கூலித் தொழிலாளியாக அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் அழகேசன் என்பவர் தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு, சரஸ்வதி வனப்பகுதியை ஒட்டியுள்ள புளிய மரத்தின் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கி, காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி தொழிலாளர்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற குமுளி காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத்து வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது பெண் கூலித் தொழிலாளி
யானைத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
உள்ளது. மேலும் அப்பகுதியில் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு வந்து செல்வதால் தொழிலாளர்கள் அச்சத்துடன் அந்த பகுதிக்கு வேலைக்கு சென்று வருவதாகவும், அப்பகுதியில் உலா வரும் யானைகளை இடமாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.