கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி - மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!
உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக்
கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயியால் பரபரப்பு
ஏற்பட்டது.
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர்.
விவசாயியான இவர் நேற்று தனது தோட்டத்து பகுதியில் அமர்ந்திருந்த போது அங்கு
வந்த இரண்டரை அடி நீளமுள்ள விஷப்பாம்பு விவசாயியை கடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் எடுத்து கொண்டு
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். விவசாயி கொண்டு வந்த பாம்பை பார்த்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்து.
இதையும் படியுங்கள் : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!
பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதலுதவி சிகிச்சை பெற்ற பின் எந்த பதற்றமும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து விவசாயி உணவருந்திக் கொண்டிருததை பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உதவியுடன் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த வனத்துறையினரிடம் பாம்பை விவசாயி ஒப்படைத்தார்.
இதையடுத்து, வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் போது, பாம்பு விவசாயிகளின் நண்பன், அதை கொலை செய்ய கூடாது, பாம்பு கடித்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். எனவே, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டு விடும்படி விவசாயி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.