மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என ராகுல் காந்தி கூறியதாக பரவும் வீடியோ போலியானது என அம்பலம்!
This News Fact Checked by Vishvas News
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என ராகுல் காந்தி கூறியதாக போலியான வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அவர் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவதைப் பற்றி பேசுவது காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் நியூஸ் வைரலான கிளிப்பை ஆய்வு செய்தது. இதில், அவரது பேச்சின் ஒரு பகுதியை குளறுபடி செய்து வைரல் கிளிப் தயார் செய்யப்பட்டது தெரியவந்தது. ராகுல் காந்தி தனது அசல் உரையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று கூறியிருந்தார்.
வைரல் கிளிப்பில் இருந்து 'இல்லை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்கள் விசாரணையில் அந்த வைரல் கிளிப் முற்றிலும் போலியானது என நிரூபிக்கப்பட்டது.
வைரலாவது என்ன?
சிந்தம் ஜெகன் மோகன் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மே 14 அன்று ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டார், அதில் ராகுல் காந்தி, "நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக நீடிப்பார். 2024, ஜூன் 4 அன்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்பார். நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அவ்ளோதான் குட்பை, நன்றி இவ்வாறு ராகுல் காந்தி கூறுகிறார். அதற்கு தொண்டர்களும் புன்னகைக்கிறார்கள்.
விசாரணை:
ராகுல் காந்தி பேசிய வீடியோ குறித்து விசாரிக்க, இந்த கிளிப்பின் ஸ்கிரீன்ஷாட்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ்களில் தேடினோம். மே 10 அன்று உத்தரபிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்ற ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் பேரணி தொடர்பான வைரல் கிளிப் என்பதை நாங்கள் அறிந்தோம்.
இந்த உரையின் 1 நிமிட பகுதியை டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் கண்டோம் . “ஜூன் 4, 2024 அன்று நரேந்திர மோடி இனி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார்” என்று ராகுல் காந்தி கூறியதை தெளிவாகக் கேட்க முடிகிறது. நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நரேந்திர மோடி ஜி இந்தியாவின் பிரதமராக முடியாது. நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளோம். கடின உழைப்பை கொடுத்துள்ளோம். இப்போது பார்த்தீர்களா, உத்திரபிரதேசத்தில் எங்கள் கூட்டணி 50 இடங்களுக்குக் குறைவாகப் பெறப் போவதில்லை. அதானிக்கு சொந்தமான இந்த ஊடகவியலாளர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு நிற்கும் செய்தியாளர்கள் எங்கள் சகோதரர்கள், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஆனால் இந்த ஏழைகள் சம்பளம் வாங்க வேண்டும், எனவே அவர்களால் உண்மையை எழுத முடியாது. அவர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஆனால் இப்போது இவர்களின் முகத்தைப் பார்த்தால் அவர்களும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் ராகுல் காந்தி சொல்வது உண்மைதான் என்பதை அவர்களும் புரிந்துகொண்டார்கள். நரேந்திர மோடி பிரதமராகப் போவதில்லை. முடிந்தது கதை, குட்பை, நன்றி.”
மே 10 அன்று டெய்லி சலார் டிஜிட்டலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட அசல் 1 நிமிட கிளிப்பைக் கண்டறிந்தோம் . 2024 ஜூன் 4 ஆம் தேதி நரேந்திர மோடி இனி இந்தியாவின் பிரதமராக முடியாது என்று ராகுல் காந்தி கூறியதையும் இங்கே கேட்கலாம்.
மே 10 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ராகுல் காந்தியின் இந்த முழுமையான உரையை லைவ் ஸ்ட்ரீம் செய்தோம் . இங்கே, 46 நிமிட இடைவெளிக்குப் பிறகு, உள்ள வீடியோ பகுதியை எடிட் செய்துதான் போலியாக வீடியோ பரப்பப்பட்டது அம்பலமானது.
தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துச் சென்ற விஸ்வாஸ் நியூஸ், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரணாப் ஜாவேத்தை தொடர்புகொண்டது. அவர், “ராகுல் காந்தியின் வைரல் கிளிப் எடிட் செய்யப்பட்டுள்ளது. அசல் வீடியோவில், ஜூன் 4 ஆம் தேதி நாட்டில் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கப்படாது என்றே ராகுல் காந்தி கூறியிருந்தார் என பிரணாப் ஜாவேத் தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில், தவறான பதிவை பதிவிட்ட பயனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்ஸ்டாகிராம் பயனாளர் 'சிந்தம் ஜெகன் மோகன்' 7000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸ் வைரலான வீடியோவை ஆராய்ந்து அது எடிட் செய்யப்பட்டதைக் கண்டறிந்தது. அசல் உரையில், “நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது” என்றே ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Note : This story was originally published by ‘Vishvas News’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.