தீபாவளி பண்டிகையன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் 5 பேர் கொலை...
தீபாவளி பண்டிகையன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
தமிழ்நாட்டில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை காரணமாக, மதுவிற்பனை வழக்கத்தை விட களைகட்டும். 2021-22 ஆம் ஆண்டுகளைவிட அதிகமாக, இந்த ஆண்டு 467.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.இவர் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே இனிப்பகம் வைத்து நடத்தி வருகிறார். மனைவி காளீஸ்வரி மற்றும் 5 வயது மகனுடன் சென்னையில் வசித்து வந்த சிவகுமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான ராஜபாளையத்திற்கு சென்றுள்ளார். நவம்பர் 12 ஆம் தேதி தெற்கு வெங்காநல்லூர் அருகே, குப்பைமேடு என்ற இடத்திலுள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சிவகுமார் தனது மனைவி காளீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரது நிலத்தில் அமர்ந்து 4 பேர் கொண்ட கும்பல், மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதைக்கண்ட சிவகுமார் அவர்களை தட்டிக்கேட்டு அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிகிறது. சிறிது நேரத்திற்குப் பின் மனைவியுடன் வீடு திரும்பிய சிவகுமாரை வழிமறித்த ஒரு கும்பல், அவரை இருசக்கர வாகனத்திலிருந்து தள்ளிவிட்டுள்ளனர். அப்போது நிலைதடுமாறி விழுந்த சிவகுமாரை அந்த கும்பல், மனைவி கண்முன்பே பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த தெற்கு காவல் நிலைய போலீசார், சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில், சிவகுமார் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்துள்ள சிந்தாமணி கிராம எல்லையில், காலனி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், சீட்டு விளையாடிக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். அருகாமையில் உள்ள காரப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடுவதை, புகைப்படம் எடுத்து போலீசாருக்கு அனுப்பப்போவதாகக் கூறி காரப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வெடித்ததில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலின்போது காரப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞரை, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கியதில் அவர் ரத்தக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல மோதலில் காயமடைந்த சிந்தாமணி காலனியைச் சேர்ந்த 3 இளைஞர்களும் திருப்பூண்டி மற்றும் நாகை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழையூர் போலீசார், மோதல் சம்பவத்தில் தொடர்புடைய இரு கிராமங்களைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர். சமுதாய ரீதியாக மோதல் உருவாகும் சூழல் அப்பகுதியில் உருவாகியுள்ளதால், மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில், எதிர்வீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற வெல்டிங் கடை உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறின்போது, மதுபோதையில் இருந்த முதியவரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிற ஈரோடு மாவட்டத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திலும், குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் எதிர்பாராமல் நடக்கும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.