"காந்தியும், அம்பேத்கரும் சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவிய மேதைகள்" - ஜான்வி கபூர்!
காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவிய மேதைகள் என்று நடிகை ஜான்வி கபூர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர். மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடக்' என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கடந்த 6 ஆண்டுகளாக இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தற்போது பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் 'தேவாரா' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்த மிஸ்டர் & மிஸ்ஸஸ் மாஹி திரைப்படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஜான்வி கபூர் கூறியதாவது,
"காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவிய மேதைகள். அந்த இரு பெரும் தலைவர்களிடையே நடக்கும் விவாதங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எவ்வளவு சிறந்த அனுபவமாக இருந்திருக்கும். ஒவ்வொரு சமூக நிகழ்வுகள் குறித்தும் காந்தியும், அம்பேத்கரும் கொண்டிருந்த கோட்பாட்டு பார்வைகள் கால மாற்றங்களுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக மாறிக்கொண்டே இருந்தன.
அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக மிகவும் தீர்க்கமான கொள்கைகளைக் கொண்டிருந்தார். நாட்டில் நிலவும் சாதி அடக்குமுறைகளை அம்பேத்கர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தததால், காந்தியின் பார்வை தொடர்ந்து உருவாகி வந்தது, மேம்பட்டு வந்தது என்று நான் நினைக்கிறேன்.
எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் எப்படி மேம்பட்டு வருகிறது? என்பதை மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் கவனிப்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்திருக்கும்."
இவ்வாறு நடிகை ஜான்வி கபூர் தெரிவித்தார்.