பட்டப்பகலில் துணிகரம்... சென்னையில் வங்கிக்குள் ஊழியருக்கு கத்திக்குத்து!
சென்னையில் பட்டப்பகலில் முன்பகை காரணமாக வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று பிற்பகல் ஒருவர் வங்கிக்குள் புகுந்து, தினேஷை கத்தியால் வெட்டியுள்ளார். வெட்டிவிட்டு
“உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணா போச்சு” என கத்தியபடியே அழுதுகொண்டு அந்த நபர் அங்கயே நின்றுள்ளார். இதனை கண்ட வங்கி ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் குத்தியவர் தினேஷின் சொந்த ஊரைச் சேர்ந்த சதீஷ் (35) என்பது தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினேஷும், சதீஷும் நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அங்கு தினேஷ் சேல்ஸ் மேனேஜராகவும், சதீஷ் சேல்ஸ் பிரிவு ஊழியராகவும் பணியாற்றியுள்ளனர்.
அப்போது நன்னடத்தை விதிமீறல் காரணமாக சதீஷை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். தனது வேலை பறிபோனதற்கு தினேஷ்தான் காரணம் என நினைத்த சதீஷ், அவரை பல மாதங்களாக தேடி வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிற செய்தியை அறிந்த சதீஷ், இன்று மதியம் வங்கிக்குள் புகுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முத்தியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், தினேஷை கத்தியால் வெட்டியுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்திக்குத்து வாங்கிய ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.