குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்... சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!
ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 4 வயது மகன் உயிரிழந்தான்.
மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 4 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இச்சூழலில் திருமலை செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சுகன்யா தனது இரண்டு குழந்தைகள் உடன், ஒரு மாதத்திற்க்கு முன்பாக தனது தாயின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சுகன்யா தனது தாய் வீட்டில் தங்கியவாறே, சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் திருமலைசெல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக டிச.8ஆம் தேதி சுகன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சுகன்யா அருகில் இருந்த 7 வயது குழந்தையை காப்பாற்றிய நிலையில், நான்கு வயது ஆண் குழந்தையின் மீது தீ பரவியுள்ளது.
தொடர்ந்து 70% தீக்காயங்களுடன் மகனை மீட்ட தாய், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த சம்பவம் குறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில், வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலை செல்வனை கைது செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நிகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே தீ வைத்து கொளுத்தியது தொடர்பாக சுகன்யா, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டு, திருமலைசெல்வன் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுவன் நிகில் உயிரிழந்ததையடுத்து அதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.