"பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி... திமுகதான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
காஞ்சிபுரத்தில் பாமகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் இன்று (ஜுன் 16) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். அப்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியதாவது,
"12 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை மாநாடு நடத்தினோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் வியந்து பார்த்தன. அதில் அதிகமான வயிற்றெரிச்சல் திமுகவுக்கு தான். பாமகவை பலவீன படுத்தவேண்டும் என்ற நோக்கம் திமுகவுக்கு உள்ளது. ஏனென்றால் அந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்தது என்று நான் பகிரங்கமாக தெரிவித்தேன். தேர்தலில் வன்னியர்களில் ஒருவர் கூட திமுகவுக்கு ஓட்டுபோட கூடாது என அறிவித்தேன். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக 4 ஆண்டுகளாக திமுக நம்பவைத்து ஏமாற்றியது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தரவுகளை தர வேண்டும் என கூறியது. ஆனால் திமுக அதனை கொடுக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் வந்துவிட்டது. இதனால் பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. நானோ, ராமதாஸோ இந்த பிரச்னைகளுக்கு காரணம் இல்லை, திமுகதான் காரணம்.
அடுத்த ஆண்டு எப்படியாவது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறது. அதற்காக எதிரில் உள்ள கட்சிகளை உடைக்க வேண்டும் என எண்ணுகிறது. எனது கட்சிக்கும், எனது சமுதாயதுக்கும் நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். நான் எப்போது அவ்வாறு செய்கிறோனா அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நமது கட்சிக்குள் சில சூழ்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் சூழ்ச்சி செய்து ராமதாசிடம் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகின்றனர். ராமதாசுக்கு அவர்களை பற்றி தெரியவில்லை"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.