காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை - ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை காஸாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் பட்டினியால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இதனால், போரை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரக்கோரி சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் இந்தியா தரப்பிலும் இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பங்கேற்ற பா்வதனேனி ஹரீஸ், ”காஸாவில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போதிய மருத்துவச் சேவைகள் கிடைக்காதது, கல்வி அணுகல் இல்லாதது என தினசரி போராடும் மக்களின் தீவிர மனிதாபிமான சவால்களை நிவா்த்தி செய்வதற்கு இடைக்கால போா் நிறுத்தங்கள் போதுமானதாக இருக்காது. எனவே, காஸாவில் முழுமையான போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ”பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைகள் மூலம் தீா்வு காண்பதே சாத்தியமான வழியாக இருக்கும்”
என்றும் தெரிவித்தார்.