For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
01:11 PM Apr 06, 2025 IST | Web Editor
 வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்    மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் ரூ.494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனை 40 ஏக்கர் பரப்பளவில், 700 படுக்கை வசதிகள், எலும்பு முறிவு, காச நோய், தீக்காயம் உள்ளிட்ட 21 துறைகள் உள்ளடங்கிய நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையின் பரப்பளவு வரைப்படம் மற்றும் மருத்துவமனை வளாகத்தை அமைச்சர்களுடன் பார்வையிட்டார். முன்னதாக பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீலகிரியில் ரூ.727 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது நீலகிரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

"நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் ரூ.26.06 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்,

பழங்குடியின மக்களின் வாழ்வியலை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையிலும், அது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையிலும் ரூ.10 கோடி மதிப்பில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்,

‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ எனும் சுற்றுலா முறை, ரூ.5 கோடி செலவில் 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்,

ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி செலவில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம்,

நடுகாணி மரபணு தொகுதி சூழலியல் இயற்கை சுற்றுலா மையம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்,

பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாய கூடங்களும், நகர்ப்புற பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு ரூ.10 கோடி செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும்" என்றார்.

இதனை தொடர்ந்து உரையாற்றியவர், "மலைகளின் அரசி உதகைக்கு வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உதகையில் ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா மாளிகை, படுகர் நலச்சங்க கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது திமுக ஆட்சியில் தான், தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு கூடலூர், பந்தலூர், கோத்தகிரி வட்டங்களை குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கியதும் திமுக தான்.

கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது நீலகிரிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவு சார்ந்த நாடளுமன்றவாதி ஆ.ராசா.நீலகிரி மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் ஆ.ராசா. வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

9.69% வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசே தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய பெஸ்ட் இதுதான் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் சூழலில், தமிழ்நாடு மட்டும் டாப் கியரில் செல்கிறது, இதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும்.தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று வழங்க வேண்டும்.

அதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வெறும் ஒரு நிமிடம் தான் பேசினார். கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகும் பேட்ஸ்மேன் கூட இதைவிட அதிக நேரம் களத்தில் இருப்பார் அப்படி அவர் பேசிய 1 நிமிடத்தில், அதிமுக இதை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை சொல்லவே இல்லை.

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு திமுகவை குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் அறிக்கை விடுகிறார். திமுக ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டிற்குள் நீட் வந்ததா? இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதுகூட அவர் நீட்டை அனுமதிக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகு, இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் நீட்டை அனுமதித்தனர். கூட்டணியில் இருந்தபோது நீட் விலக்கு வேண்டும் என பாஜகவிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை? பாஜகவுடன் கூட்டணி இருக்கு, இல்லை என மாற்றி மாற்றி பேசும் உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.

தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள்மீது உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பாஜக கூட்டணிக்குச் செல்லும் முன், நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? தமிழ்நாட்டை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விடமாட்டான், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement