பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கருக்கு முற்றிய நெருக்கடி - UPSC அதிரடி நடவடிக்கை!
சிவில் சர்வீஸ் தேர்வு விண்ணப்பத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ளன. புனே மாவட்டத்தில் பணியாற்றிய போது தனது சொந்த வாகனத்தில் அரசு ஊழியருக்கான அடையாள பலகை வைத்தது, சைரன் பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
மேலும், ஐஏஎஸ் தேர்விலும் சலுகைகளை பெற தனது குடும்ப வருமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் போலி முகவரி மற்றும் ரேஷன் கார்டு மூலம் மாற்றுத்திறனாளி சான்றிதழை பெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும், யஷ்வந்த்ராவ் சவான் மெமோரியல் (ஒய்சிஎம்) மருத்துவமனையின் முகவரியை ‘பிளாட் எண். 53, தேஹு-ஆலந்தி, தல்வாடே’ என்று பூஜா வழங்கியிருந்தார். இது பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள தனது வீடு என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த முகவரி பூஜா கேட்கர்க்கு சொந்தமான தெர்மோவெரிடா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. அது இப்போது மூடப்பட்டது. இது தவிர தெர்மோவெரிட்டா நிறுவனத்தின் பெயரில் ஆடி காரை அவர் பதிவு செய்துள்ளார். பிம்ப்ரி-சின்ச்வாட் நகராட்சியின் வரி வசூல் துறையின்படி, இந்த நிறுவனத்தின் மேல் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.2.7 லட்சம் வரி நிலுவையில் உள்ளது.
இந்த ஆவணங்களில் நிறுவனத்தின் முகவரியைப் பயன்படுத்தி போலி ரேஷன் கார்டு தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. மாற்றுத்திறனாளி சான்றிதழை பெற கேட்கர் இந்த ரேஷன் கார்டையே பயன்படுத்தினார். ஆகஸ்ட் 24, 2022 அன்று வழங்கப்பட்ட சான்றிதழில், அவருக்கு முழங்காலில் 7% செயல்படாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொய் கூறி, தனது அடையாளத்தை மறைத்து தேர்வு எழுதியதற்காக பூஜா கேட்கருக்கு விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரம்பு மீறி மோசடி செய்ய முயற்சித்த பூஜா கேத்கருக்கு எதிராக யுபிஎஸ்சி நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும், கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு அவர் அளிக்கும் பதிலை வைத்து, எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.