சிதம்பரம் அருகே கார், லாரி மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!
சிதம்பரம் அருகே கார் லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி 5 பேருடன் கார் சென்றுக்கொண்டிருந்தது. இவர்கள் கார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் அடியில் சிக்கி இருந்த காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாசர் அராபத்(40), முகமது அன்வர்(56), ஹாஜிதா பேகம்(62), சராபாத் நிஷா(30), அப்னான்(2) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் அதிவேகத்தில் மயிலாடுதுறை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததா? ஓட்டுனர்களின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிவேக பயணம் ஆபத்து என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிவேகத்தில் பயணிப்பதே விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.