வேலைக்கு சென்ற பெற்றோரை தேடிச்சென்ற போது ஓடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
செங்கம் அருகே ஓடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது . இதனால் 6400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் சுற்றுவட்டார மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கம் அடுத்த படி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பழனி, சௌந்தர்யா தம்பதியினர் தங்களது மகன் லோகேஷை ( வயது 4 ) வீட்டில் தூங்க வைத்து விட்டு இருவரும் விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே தூங்கி எழுந்த குழந்தை பெற்றோரை தேடி தோட்டத்திற்கு சென்றபோது ஓடையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று தொரப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவரின் வீடு கனமழையால் இடிந்துள்ளதை பார்க்க சென்ற அவரது சகோதரர் சதாசிவம் என்பவர் மின் கம்பியை மிதித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த இரண்டு கோர நிகழ்வுகளும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.