வாத்து மேய்க்க சென்ற சிறுவன், சிறுமி உயிரிழப்பு... விழுப்புரத்தில் சோகம்!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள எடையாரை சேர்ந்தவர் அறிவுநிதி. இவர் தனது சித்தியின் 4 வயது மகன் ருத்ரேஷ்வரனை வளர்த்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் அறிவுநிதியின் உறவினரான கண்மனி - ராஜேந்திரனின் 11 வயது மகள் ஜெயலட்சுமி அறிவுநிதியின் வீட்டிற்கு வந்தார். இந்த சூழலில், அறிவுநிதி எடையாரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அடுத்த கூவாகத்திற்கு வாத்து மேய்பதற்காக புறப்பட்டார். அப்போது, சிறுவன் ருத்ரேஷ்வரன் மற்றும் சிறுமி ஜெயலட்சுமி ஆகிய இருவரும் வாய்த்து மேய்க்க வருவதாக கூறி அறிவுநிதியுடன் சென்றனர்.
வாத்து மேய்த்து கொண்டிருந்தபோது சிறுவனும், சிறுமியும் கூவாகத்தில் உள்ள குட்டையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கினர். இதனையறிந்த அருள்நிதி குட்டையில் மூழ்கிய இருவரையும் மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குசிறுமி சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த சிறுவன், சிறுமியின் உடல்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டுச் செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.