3.5 செமீ நீளமுடைய எலும்பு துண்டை விழுங்கிய 66 வயது முதியவர்... காப்பாற்றிய மருத்துவர்கள்!
இதயத்திற்கு அருகில் இருந்த 3.5 செமீ நீளமுடைய எலும்பை அறுவை சிகிச்சை மூலம் எளிதாக நீக்கியுள்ளனர் ஹைதராபாத் காமினேனி மருத்துவமனை மருத்துவர்கள்.
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள கக்கிரேணி கிராமத்தைச் சேர்ந்தவர் 66 வயதான ஸ்ரீராமுலு. வயதானதால் இவருக்கு பற்கள் அனைத்தும் கொட்டி, உணவை சரியாக மென்று சாப்பிட முடியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற இவர், விருந்தில் கவனக்குறைவாக 3.5 செமீ நீளமுள்ள எலும்பை கறியுடன் சேர்த்து விழுங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் ராமுலுக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வயிற்று பிரச்னை என நினைத்து உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று காட்டி வந்துள்ளார். பின்னர் அம்மருத்துவர்கள் காமினேனி மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ராதிகா நிட்டாலாவிடம் அவரை அனுப்பியுள்ளனர். அந்த எலும்பு இதயத்திற்கு அருகில் உள்ள உணவுக்குழாய் சுவரைத் துளைத்து, புண்களை உண்டாக்கியுள்ளது. இதனையறிந்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிக்கரமாக காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து தகுந்த உணவு முறைகளை பின்பற்றுமாறும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.