அமெரிக்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி உயிரிழப்பு!
அமெரிக்காவின் டோபேகா உயிரியல் பூங்காவில், கரேன் என அழைக்கப்படும் 5 வயது பெண் நெருப்புக்கோழி ஊழியர் ஒருவரின் சாவியை முழுங்கி உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ளது டோபேகா உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் 300க்கும் வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பூங்காவில் கரேன் என அன்பாக அழைக்கப்படும் 5 வயது பெண் நெருப்புக்கோழி ஒன்று, ஊழியர் ஒருவரின் சாவியை விழுங்கியதால் உயிரிழந்துள்ளது.
கரேன் தனது கண்காட்சி கூண்டை தாண்டி வந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரின் சாவியை முழுங்கியதாக உயிரியல் பூங்கா கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
“கரேனை காப்பாற்ற அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லாத வேறு வழிகள் என அமெரிக்காவை சுற்றியுள்ள அனைத்து நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
ஊழியர்களின் கைகளிலேயே கரேன் உயிரிழந்தாள். அவள் வெறும் ஒரு உயிரினம் மட்டுமல்ல அவள் எங்கள் சமுதாயத்தின் அன்பான ஒரு உறுப்பினர்’ என பூங்காவின் இடைக்கால் இயக்குநர் ஃபான் மோசர் தெரிவித்துள்ளார்.
கரேன் என அவர்கள் அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இந்த நெருப்புக் கோழி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இங்கு இருந்துள்ளது. அங்குள்ள ஊழியர்கள் அனைவராலும் ‘நடன ராணி’ என அன்புடன் அழைக்கபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.