குஜராத் | சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலி!
குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது.
குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா வைரஸ் பரவி வருகிறது. கொசு உள்ளிட்ட சில பூச்சிகளின் மூலம் இந்த வைரல் பரவுகிறது. இது கிராமப் புறங்களில் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல், வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
இதன் காரணமாக குஜராத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 44,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 14 பேருக்கு 'சண்டிபுரா' வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என் முதல்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்களின் மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.
சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும். இது முதன்முதலில் 1965ல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இது சண்டிபுரா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் குழந்தைகளிடையே அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது.