காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!
அழித்தொழிக்கப்பட்டு வரும் காஸாவில் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களுக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறார். 15 வயதான ஹுசாம் அல் - அத்தார் 'காஸாவின் நியூட்டன்' எனப் பெயர் பெற்றுள்ளார். கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் காஸாவில் கிடைத்த பொருள்களை வைத்து மின்சாரம் தயாரித்திருக்கிறார் இச்சிறுவர்.
இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்கு காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளார் ஹுசாம். இணையதளத்தில் இச்சிறுவனக்கு பெரும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது. 'இருளுக்குள் இருந்த என் சகோரர்களைப் பார்த்தேன். அவர்கள் கண்ணில் பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் அளிக்க நினைத்தேன்' என ஹூசாம் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மொத்த காஸாவையும் இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில் இந்தச் சிறுவனின் முயற்சி கும்மிருட்டில் பிரகாசமாகத் தெரிகிறது. இணையதளங்களிலும், அல்ஜசீரா போன்ற பெரிய ஊடகங்களிலும் இவனது வெளிச்சம் வலம் வருகிறது. நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும் என அவன் கூறியுள்ளான். தனது மகன் சிறு வயதிலிருந்தே திறமையானவன் எனவும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை அவன் நிகழ்த்துவான் எனவும் அவனது தாயார் கூறுகிறார்.