Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்! முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது!

05:52 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி
முதல் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த
முகாமில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். அந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள அடிட்டோரியத்தில் உறங்கி முகாமில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி முகாமில் கலந்துகொண்டு அடிட்டோரியத்தில் உறங்கி
கொண்டு இருந்த 12 வயது சிறுமியை அதிகாலை 3 மணி அளவில் அழைத்து சென்ற தேசிய மாணவர் படை பயிற்றுநரான காவரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் ஆசிரியர் மற்றும் முதல்வரிடம் புகார் அளித்து உள்ளார். அதற்கு பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் இதனால் உனது பெற்றோர் வேதனை அடைவார்கள் என கூறி அனுப்பி வைத்து உள்ளார்.

இதனை அடுத்து கடந்த 16ம் தேதி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்
தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
உடனடியாக மாணவியின் தாயார் தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சோதனை செய்த போது மாணவி பாலியல்
வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதனை தொடந்து மாணவி அளித்த புகாரின்
அடிப்படையில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என்.சி.சி பயிற்றுநர்
சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி உமா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடந்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல்
ஆசிரியர் ஜெனிபர், தாளாளர் சாம்சன் வெஸ்லி, என்.சி.சி பயிற்சியாளரான சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை நேற்று (18.08.2024)கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சிவராமன் மற்றும் பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவரை பிடிக்க நேற்று (18.08.2024) 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்தார். தற்போது பாலியல் வழக்கில் சிக்கியதால் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த சிவராமன் பள்ளியில் பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார் என்றும் இவர் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் என்.சி.சி பயிற்சி வகுப்பு நடத்துகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து இன்று (19.08.2024) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேர் கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளார்கள். விசாரணையில் என்சிசிக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. புகார் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக நான்கு தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி உட்பட 11 பேரை கைது செய்துள்ளோம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலமாக குழந்தைகளிடம் விசாரணை செய்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உளவியல் ரீதியான உதவிகளை செய்து வருகிறோம்.

கல்வித்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். நேற்று எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முக்கிய குற்றவாளி உட்பட மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளோம். வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் மூலமாக விரிவான விளக்கம் கேட்டு உள்ளார்கள்.

பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும் பொழுது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. என்சிசி மூலமாக இந்த முகாம் நடத்தப்படவில்லை என இது குறித்து என்சிசி விளக்கம் அளித்துள்ளது. என்சிசியிடம் எந்தவித அனுமதி கடிதமும் பெறாமல் இந்த முகம் நடத்தியுள்ளார்கள். ஐந்து நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடம் பேசி உள்ளோம். அவர்கள் அனைவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு கூறியுள்ளார்.

Tags :
Krishnagirinews7 tamilNews7 Tamil UpdatesSexual harassment
Advertisement
Next Article