ஒரு வயது குழந்தைக்கு மறுவாழ்வளித்த 10 மாதக் குழந்தை!
கோவையில் மூளைச் சாவு அடைந்த 10 மாதக் குழந்தையின் இதயம் தானமாகப் பெறப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வருகிறார். அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.
இந்த தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை இருந்தது. நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அந்த மருத்துவமைனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சையளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை மூளைச் சாவு அடைந்தது.
இதையும் படியுங்கள் : “தென்மாவட்டங்களில் சாதிப்படுகொலைகளை தடுக்க வேண்டும்” – இயக்குநர் மாரி செல்வராஜ்!
பின்னர், குழந்தையின் இதயத்தை தானமளிக்க பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, குழந்தையின் உடலில் இருந்து இதயம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் இதயம் தானமாக பெறுவதற்காக காத்திருந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு அது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.