மாஸ்கோ தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
ரஷ்யாவில் இசைக்கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. அங்கு கடந்த வாரம் ‘பிக்னிக்’ என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கத்தின் 7,500 இருக்கைகளும் ரசிகர்களால் நிரம்பி இருந்தன.
இரவு 8 மணிக்கு இசைக் கச்சேரி தொடங்க இருந்த நிலையில், திடீரென 4 பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் அரங்கத்துக்குள் நுழைந்து நான்கு புறமும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய ரசாயனத்தை அரங்கம் முழுவதும் தெளித்தனர். இதன் காரணமாக அரங்கம் தீ பற்றி எரிந்தது. பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 140 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 182 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு படையினர் வருவதற்குள், 4 பயங்கரவாதிகளும் தப்பினர்.
ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை, ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்கள் அதிதீவிரமாக தேடி உக்ரைன் எல்லை அருகே பிடித்தனர்.இந்த தாக்குதலில் உக்ரைனின் பங்கு இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டினார். ஆனால் உக்ரைன் இதனை மறுத்துவிட்டது. இதனிடையே சிரியா, ஈராக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 95 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 9 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளின் உடல்கள் உட்பட 84 உடல்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அத்துடன் மீதமுள்ளவர்களின் உடல்கள், மரபணு சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.