காங்கோவில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் - 89 பேர் பலி!
ஆப்ரிக்க நாடான காங்கோவில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் காங்கோ உகாண்டா எல்லையில் இயங்கி வரும் கூட்டணி ஜனநாயக படை (ADF) என்னும் பயங்கரவாத அமைப்பு நேற்று இரவு கிழக்கு காங்கோவில் உள்ள நியோட்டொவில் ஒரு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் சுமார் 71 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஏடிஎப் அமைப்பு பெனி என்னும் பகுதியில் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
1990 ஆண்டு காங்கோவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி இந்த ஏடிஎப் அமைப்பு உருவானது. அண்டை நாடான உகாண்டாவில் உருவான இந்த அமைப்பு இரு நாடுகளிலும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா வானது ஏடிஎப் அமைப்பு தடை செய்வதாக அறிவித்தது குறிப்பிடதக்கது.