For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்கள் - நவ. 7 முதல் கலந்தாய்வு தொடக்கம்..!

10:31 AM Nov 01, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்கள்   நவ  7 முதல் கலந்தாய்வு தொடக்கம்
Advertisement

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 7 முதல் கலந்தாய்வு தொடக்க உள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அகில இந்திய கலந்தாய்வு தொடங்கியுள்ளது.  இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 7ம் தேதி மாநில அரசின் கலந்தாய்வு  தொடங்குகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1.5 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.  இந்த இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே நடத்துகிறது.

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசு நடத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு, மாநில அரசின் கலந்தாய்வு 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு முடிவில் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் என மொத்தம் 69 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 13 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 4 இடங்கள் என மொத்தம் 17 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.

மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் முடிந்துவிட்டதால், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கு திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது. அதேபோல், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி முடிந்துவிட்டதால், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இந்த நிலையில், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் மருத்துவர் அருணலதா தெரிவித்ததாவது..

எம்பிபிஎஸ் இடங்கள் வீணாகிவிடக் கூடாது என்பதால் கலந்தாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 69 எம்பிபிஎஸ் இடங்களுக்கு வரும் 7ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மாநில அரசு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் 17 எம்பிபிஎஸ் இடங்களுக்கு நவ. 7 முதல் 15-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தை அணுகலாம்” என அருணலதா தெரிவித்தார்.

Tags :
Advertisement