CSKvsRCB | பெங்களூர் அணி அபார பேட்டிங் - சென்னைக்கு 214 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டிற்கான ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி, ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியை இன்று(மே.03) எதிர்கொண்டு வருகிறது. சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பவர் பிளேவில் சென்னை அணி பவுலர்களை பந்தாடினர். அதன் பின்பு மதீஷா பத்திரானா வீசிய 10 ஆவது ஓவரில் ஜேக்கப் பெத்தேல் 55 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து பெங்களூர் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 62 ரன்கள் அடித்து சாம் கரனிடம் ஆட்டமிழந்தார்.
அவருக்கடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்பு வரிசையாக ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் ஆகியோர் சொற்ப ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக களத்தில் நின்ற ஷெப்பர்ட் 14 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரி அடித்து 53 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இதையடுத்து 214 என்ற இலக்கை சென்னை அணி சேஸிங் செய்ய உள்ளது.