சார்ஜ் செய்தால் 800 கி.மீ. மைலேஜ்… மார்ச் 28-ல் சந்தைக்கு வரும் Xiaomi SU7 EV கார்...
மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமியின் இரண்டாவது எலெக்ட்ரிக் காரான Xiaomi SU7 EV வரும் மார்ச் 28-ம் தேதி முதல் சீனாவில் சந்தைப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தனது புதிய தயாரிப்பான மின்சார காரை அறிமுகப்படுத்தி ஜியோமி நிறுவனம் ஆச்சரியப்பட செய்தது.
கடந்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் ஜியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எஸ்யூ 7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்தனர். சூப்பர்காரான மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.
ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தொலைவு வரை பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக இயங்க கூடிய தானியங்கி ஓட்டுநர், பிரத்யேக இயங்குதளம் (ஓஎஸ்) உள்ளிட்டவற்றை ஜியோமி வடிவமைத்துள்ளது. 2021-ம் ஆண்டு இந்த காருக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடியை ஜியோமி முதலீடு செய்தது.
இந்நிலையில், மூன்றாண்டு காத்திருப்புக்குப் பின் வரும் மார்ச் 28-ம் தேதி முதல் சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரில் ஸியோமியின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கார் எந்தெந்த நாடுகளில் என்ன விலைக்குக் கிடைக்கும் என்பதான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.