கடலில் சர்ஃப்பிங்: 80 வயது மூதாட்டியின் வீடியோ வைரல்!
80 வயது நிரம்பிய ஒரு பாட்டி தனது பேத்தியுடன் கடலில் சர்ஃப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாகசங்கள் செய்ய பல வழிகள் உள்ளன. மலை ஏறுவது, படகு சவாரி, வானில் பறப்பது, ஒற்றை கயிற்றில் மலையில் இருந்து தொங்குவது என்று. அதை போலத்தான் கடலின் அலைகளோடு விளையாடும் ஒரு சாகச விளையாட்டு சர்ஃப்பிங். அதுவே கொஞ்சம் தீவிரமானால், பெரிய சுவர் போன்ற அலைகளோடு உலவும் பிக்-வேவ் சர்ஃப்பிங் என்று அழைக்கப்படுகிறது.
கடலில் குளிப்பது, கடற்கரையில் காலை நனைப்பது, அந்த வாசத்தில் அமர்ந்து இருப்பது ஒரு வகையினருக்கு பிடிக்குமென்றால் அதில் இறங்கி நீச்சலடிப்பது, பல்வேறு ரைடு போவது, ஸ்நோர்கெலிங் செய்வது, சர்ஃபிங் செய்வது போன்ற நீர் விளையாட்டுகள் சாகச விரும்பிகளின் தேர்வாகும்.
வயது என்பது வெறும் எண்களே என்று பலரும் கூறக்கேட்டிருப்பீர்கள். அந்த வகையில் 80 வயது மூதாட்டி பழமொழியை உண்மை என நிரூபித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கோஸ்டாரிகா ஒலிம்பிக் தடகள வீராங்கனையும், 80 வயதான அந்த பாட்டியின் பேத்தியுமான பிரிசா ஹென்னெஸி, இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“இந்த மகிழ்ச்சியான இடத்தை என் பாட்டியுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு” என்ற மேற்கோளுடன் தனது பாட்டி கடலில் முதன்முறையான தனது 80 வயதில் சர்ஃப்பிங் செய்யும் வீடியோவை அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பேத்தியின் உதவியுடன் அவர் எப்படி இந்த அலை சவாரியை செய்கிறார் என்பதை அவர்கள் பதிவிட்ட வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோவில் பலரும் தனது மகிழ்ச்சியையும், அவர்கள் வயதில் தான் சர்ஃப்பிங் செய்யும் போது அவர்கள் பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.