ஒரே ஆண்டில் ரூ.8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்,நேற்று அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரு தெற்கு பா.ஜக. எம்.பி. தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை தூதரகத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி பேசுகையில், "பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது. ஆனால் விரைவில் விசா சேவை துவங்கும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும். நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகர மக்களுக்கு இது மிகவும் அனுகூலமாக இருக்கும். ஏற்கனவே, 12 நாடுகளின் துணை தூதரகங்கள் பெங்களூரில் உள்ளன. பல நாடுகளின் தூதரகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது.
இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்த முயற்சி நடக்கிறது. பெங்களூருவில் உள்ள ஏராளமான வளங்களை பயன்படுத்த வேண்டும். பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.