124 ஆண்டுகளில் 7வது முறையாக மே மாதத்தில் அதிக மழைப்பதிவு!
தமிழ்நாட்டில் நிகழாண்டில் 124 ஆண்டுகளில் 7வது முறையாக கோடைமழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னே வெயில் வெளுத்து வாங்கியது. மேலும் வெப்ப அலையும் வீசத் தொடங்கியது. இதனையடுத்து மே முழுவதும் வெப்ப அலை தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மே முழுவதும் வெயில் கொளுத்தும் என மக்கள் அச்சம் கொண்டநிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ரிமல் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது.
இதனால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் 200மி.மீ வரை மழை பதிவானது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக நிகழாண்டு மே மாதத்தில் அதிக மழை நிகழாண்டு பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1943-ஆம் ஆண்டு மே மாதத்தில் 205.2 மி.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து 1930-இல் 163.7 மி.மீ., 1972-இல் 149.4., 1955-இல் 148 மி.மீ., 1995-இல் 142.5 மி.மீ., 2014-இல் 139.3 மி.மீ. மற்றும் நிகழாண்டில் (2024) மே மாதத்தில் 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.