79-வது சுதந்திரதினம் - டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று 12-வது முறையாக தேசியக் கொடியேற்றினார்.
இந்த நிலையில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. செங்கோட்டையில் முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் வரவேற்று செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட 5000 சிறப்பு விருந்தினர்கள் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி பங்கேற்றுள்ளனர். இதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை, மத்திய போலீஸ் படை மற்றும் டெல்லி போலீசார் என 15,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.