78-ஆவது சுதந்திர தினம்.. வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்!
பஞ்சாப்பில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து மாலையில், தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பை உற்சாகமாக கண்டுகளித்தனர்.