இந்த ஆண்டின் 2 வாரங்களில் வேலையை இழந்த 7,785 ஊழியர்கள்!
2024-ம் ஆண்டில் இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், 7785 ஊழியர்களை டெக் நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான பில்கேட்ஸ், “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வருகிறது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது." என தெரிவித்தார்.
இந்நிலையில், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஜனவரியின் முதல் இரு வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இதுவரை 7785 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைகளை ஆராயும் Layoffs.fyi என்ற கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த கூற்றுகள் கிடைத்துள்ளன.