"தமிழ்நாட்டில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன" - அமைச்சர் #SenthilBalaji தகவல்
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் இன்று (டிச.9) தொடங்கியது. முதலாவதாக முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக கேள்வி நேரம் தொடங்குகியது. அதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலத்தில் மின்கம்பங்கள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,
"திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 11,509 ஓவர் லோடு மின்மாற்றிகள் கணக்கெடுக்கப்பட்டு 8,105 லோ வோல்டேஜ் மின் மாற்றிகள் கணக்கெடுக்கப்பட்டு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 51,532 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாதவரம் தொகுதியில் நான்கு துணைமின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்க்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதைவிட கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 கோட்டங்களில் மட்டும் டெண்டர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது"
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.