#Biryani கொண்டு வந்ததால் 7 வயது சிறுவன் பள்ளியிலிருந்து நீக்கம் - உ.பி.யில் அதிர்ச்சி!
பிரியாணி கொண்டு வந்ததால் 7வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்தார் எனக் கூறி 7 வயது சிறுவனை பள்ளியிலிருந்து அப்பள்ளியின் முதல்வர் நீக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட தனது குழந்தையை வெளியேற்றியதற்கான காரணத்தை கேட்டு பள்ளி முதல்வருடன் சிறுவனின் தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் அம்ரோஹா முஸ்லிம் கமிட்டி பள்ளி முதல்வருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பள்ளியில் அசைவ கொண்டு வந்த முஸ்லிம் சிறுவனை மதரீதியாக துன்புறுத்தியுள்ளதால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்ரோஹாவின் துணை மாஜிஸ்திரேட் சுதிர் குமார், அடிப்படை கல்வி அதிகாரி (BSA) மற்றும் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் பள்ளியின் முதல்வர் “ இந்த மாதிரி சிறுவர்கள் வளர்ந்த பிறகு கோயிலை இடிப்பார்கள். வரும் காலங்களில் கோயிலை இடிக்கும் இவர்களுக்கு என்னால் கல்வி கற்பிக்க முடியாது.” என தெரிவித்துள்ளார். மேலும் உணவுக்காக மாணவரை தரக்குறைவாகவும் , தகாத வார்த்தைகளைக் கூறியும் திட்டியுள்ளதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என துணை மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்