எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.
வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்களின்
இனப்பெருக்க காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் முட்டை அழிக்கப்பட்டு
மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதனால், மத்திய அரசு இந்த 61
நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. கைதான இலங்கை மீனவர்களிடம் இந்திய கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.