69-வது ஃபிலிம்ஃபேர் | விருதுகளை அள்ளிக் குவித்த ‘12th Fail’!
69-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ‘12th Fail’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தித் திரையுலகில் சிறந்து விளங்கும் திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 69-வது ஹூண்டாய் 'ஃபிலிம்பேர் விருதுகள் 2024' குஜராத்தின் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் கன்வென்ஷன் & கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. மதிப்புமிக்க பிளாக் லேடி உருவம் கொண்ட அந்த விருது பல ஆண்டுகளாக பொழுதுபோக்கு துறையில் வெற்றியின் அடையாளமாக இருந்து வருகிறது. நடிகர்கள் அபர்சக்தி குரானா மற்றும் கரிஷ்மா தன்னா ஆகியோர் 69 வது ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இதில், விது வினோத் சோப்ரா இயக்கத்தில் '12th fail' சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு), சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் விருது வென்று சாதனை படைத்துள்ளது. இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் போராட்டங்களின் கதையைச் சொல்லும் இப்படம் அனுராக் பதக்கின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் Disney Hotstar இல் காண கிடைக்கிறது .