For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” - மத்திய அரசு தகவல்!

10:05 PM Jul 29, 2024 IST | Web Editor
“வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு ”   மத்திய அரசு தகவல்
Advertisement

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில்,  கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங், வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பித்தார்.

இது குறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் கூறியதாவது, "2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். அவற்றில் அதிக எண்ணிக்கையிலாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 ஆகவும் உள்ளது. அடுத்ததாக, இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், பாகிஸ்தானில் ஒருவர் என மொத்தம் 41 நாடுகளில் இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், அதில் தாக்குதல்கள் மூலம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர், ஆஸ்திரேலியாவில் ஒருவர், சீனாவில் ஒருவர், இங்கிலாந்து மற்றும் கிர்கிஸ்தானில் தலா ஒருவர் தாக்குதல்கள் மூலம் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை இந்தியத் தூதரகங்கள் உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

Tags :
Advertisement