#J&K சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவாகி உள்ளன.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. செப்.18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே, தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதன் முடிவுகள் அக்.8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலாகும். இந்நிலையில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மக்களவை தேர்தலைவிட அதிகமாகும். மக்களவை தேர்தலில் 58.58 சதவீத வாக்குகளே ஜம்மு-காஷ்மீரில் பதிவாகின.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களே அதிக அளவு வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் ஆண்களின் பங்களிப்பு 64.68 சதவீதம் எனவும், பெண்களின் வாக்குப்பதிவு 63.04 சதவீதம் எனவும், மூன்றாம் பாலினத்தவர் 38.24 சதவீதம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.