தூத்துக்குடியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் - 6000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!
விளாத்திகுளம் அருகே ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தினால் 6,000 கோழி குஞ்சுகள் உயிரிழந்ததுள்ளன.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.
இதையும் படியுங்கள்: மீட்புப்பணியில் ஒருங்கிணைப்பு இல்லை – ஆளுநர் மாளிகை அறிக்கை!
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, சோழவாரத்தைச் சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் குருசாமி, சுமார் 6000 கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். விளாத்திகுளம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்து, 6000 கோழிக்குஞ்சுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.
மேலும் கோழிப்பண்ணை முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் பல லட்ச ரூபாய் வரை தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோழிப்பண்ணை உரிமையாளர் குருசாமி தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் எட்டையபுரம் பகுதிகளில் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.