சுகாதாரமற்ற உணவால் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகின்றனர்!
சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டிற்கு 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும், அதில் 4,20,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.
உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது எப்படி உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பதுதான் இந்த ஆண்டிற்கான கருப்பொருள். ஐ.நா. சபையும் பிற அமைப்புகளும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதாவது ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 40% என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 4,20,000 பேர் இதனால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளது. கிருமிகள், ரசாயனங்கள் கலந்த மோசமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இவை புற்றுநோயைக்கூட உண்டாக்கும்.
பாதுகாப்பற்ற உணவு மனித ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இது ஒதுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், மோதலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிகமாக பாதிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பாக உட்கொள்ளப்படும் உணவுகளால் சமூகம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரச் செலவுகள் குறைவாகவும் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவினால் ஏற்படும் அபாயங்களை கண்டறியவும், அவற்றை நிர்வகிக்கவும், நடவடிக்கை எடுப்பதும் உலக உணவுப் பாதுகாப்பு நாள் நோக்கமாக உள்ளது.
உணவு பாதுகாப்பு:
உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு: உற்பத்தியாளர்கள் முதல் நுகர்வோர் வரை அனைவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். உணவுப் பாதுகாப்புக்காக அனைவரும் நம் பங்கை ஆற்றியிருந்தாலும், எதிர்பாராத தலையீடுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பில் சமரசம் செய்யும் சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் சமரசங்களால் சிறிய நிகழ்வுகள் முதல் சர்வதேச நெருக்கடிகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் மின்சாரம் துண்டிப்பு, உள்ளூர் உணவகத்தில் உணவு விஷமாவது (காலாவதியான உணவு), உற்பத்தியாளர்கள் அசுத்தமான பொருட்களை விநியோகம் செய்வது போன்றவை உணவு பாதுகாப்பில் குறை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு சம்பவங்கள் எவ்வளவு எளிமையானதாக அல்லது கடுமையானதாக இருந்தாலும் அதற்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துறைப்பதே உணவு பாதுகாப்பு தினத்தின் நோக்கம் ஆகும். உணவுப் பாதுகாப்பை நிர்வகிக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் உணவு வணிகர்கள் ஆகியோரின் முயற்சிகள் தேவைப்படும் வேளையில், நுகர்வோர்களும் பங்கு வகிக்கவேண்டும்.
உணவு பாதுகாப்பை மேம்படுத்துவது ஏன்?
பாதுகாப்பான உணவு முறை, நமது வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும்.
உணவினால் பரவும் நோய்கள் பொதுவாக தொற்று அல்லது நச்சுத்தன்மை கொண்டவை. இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவை. பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயனப் பொருட்கள் அசுத்தமான உணவு அல்லது தண்ணீரின் மூலம் உடலுக்குள் நுழைகின்றன.
உற்பத்தி முதல் அறுவடை, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம், தயாரித்தல் மற்றும் நுகர்வு வரை - உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த சர்வதேச உணவு பாதுகாப்பு தினம் உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
‘EatRite India’ என்பது இந்திய அரசாங்கமும் இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்தியாவில் உள்ள மக்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான, நிலையான உணவு உட்கொள்வதை உறுதிசெய்யும் திட்டம். ‘ஆயுஷ்மான் பாரத்’, ‘போஜன் அபியான்’ போன்ற பிற திட்டங்களுடன் இது செயல்படுத்தப்படுகிறது.